Friday, 19 October 2018

YEN KAADHAL NILA

                               

                                      என் காதல் நிலா !


 அத்தியாயம் 1





அது ஒரு பெரிய மண்டபம், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அமர ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் மற்றும் பலூன்களால் அலங்கரிக்க பட்டிருக்க , ஒளி உமிழும் விளக்குகள் பாரபட்சமின்றி தன்னுடைய கதிர்களை வீசி கொண்டிருந்தது.

திருமண மண்டபம் உறவினர்களால் நிறைந்து இருக்க , இரு குடும்பங்களும் வந்து கொண்டிருப்பர்வர்களை வரவேற்பதிலும் அவர்களை சாப்பிட செய்து கவனிப்பதிலும் நேரம் சென்று கொண்டிருந்தது .

வந்தவர்கள் மாப்பிள்ளை பெண்ணின் ஜோடி பொருத்த  அழகினை பார்த்து வியந்து பேசி கொண்டிருக்க , சந்தானராமசாமி  மிக பெருமையாக , நாம் தேடியிருந்தால் கூட இப்படி ஒரு பெண்ணை கண்டிருக்க முடியாது, என்ன இருந்தாலும் என் மகனாயிற்றே  என்று நம் கதையின் நாயகனை பற்றி தன் மனைவி கோகிலாவிடம் புகழ்ந்து கொண்டிருந்தார்.

நாராயணமூர்த்தியோ  பெண்ணை பெற்றவராயிற்றே , தன்னுடைய சுகர் மாத்திரையை கூட போட மறந்து வேலைகளை கவனித்து கொண்டிருந்தார் . அவருடைய மனைவி துர்காதேவியோ அவரை எப்படியாவது  மாத்திரை போட  வைத்திட வேண்டும் என அவருக்கு பின்னாலயே சென்று கொண்டிருக்க , திருமணத்திற்கு வந்த வாண்டுகள் தங்களுடைய மிக முக்கியமான பணியான  ஓடி பிடித்து விளையாடும் விளையாட்டின் மூலமாக அங்கிருந்த பெரியவர்களை இடித்து தள்ளி ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தனர்.

சந்தானமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த கச்சேரி குழுவினரோ இன்றைய இளைஞர்களுக்கு தேவையான காதல் பாடல் மூலமாக அங்கிருந்த இளசுகளுக்கு இலவச விருந்து படைத்து கொண்டிருந்தன. இப்படி ஒரு திருமண சாப்பாடு எங்கேயும் சாப்பிட்டது கிடையாது என மணமகன் உறவினர்களே பெருமை பேசும் அளவிற்க்கு நாராயணமூர்த்தி அந்த ஊரிலேயே மிக பெரிய சமையல்காரரை ஏற்பாடு செய்து அதையும் குறைவில்லாமல் கவனித்து கொண்டிருந்தார் .

மணமேடையில் அலங்காரம் மின்னி கொண்டிருக்க , ஐயர் மந்திரங்களை செவ்வனே சொல்லி கொண்டிருந்தார். வேண்டாவிருப்பாக தன் அருகில் அமர்ந்து , இன்னும் சிறிது நேரத்தில் தன் மனைவியாக போகிறவளை நிமிர்ந்து பார்த்தான் ஈஸ்வரன்  என்று பாசமாக பெற்றவர்களாலும் , அர்ஜுன் சார் என்று தொழில் வட்டாரத்தாலும் , அர்ஜுன் என்று நண்பர்களாலும் , அஜூ என்று ஒரு காலத்தில் அவளால் காதலாக  அழைக்கப்பட்ட நம் நாயகன் அர்ஜுனேஸ்வரன் .

மயில் கழுத்து நிற பெரிய பார்டர்  ஜமுக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட புடவையில் ரோஜா நிற ஆரி வேலைப்பாடு செய்யப்பட்ட ரவிக்கையில்   , தங்க மயிலாக அவள் ஜொலித்து கொண்டிருக்கும் அவளது  அழகு , அவனை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. 

பார்வையின் வீரியம் தாங்காமல், திவ்யா என்று பெற்றவர்களாலும் , தர்ஷினி என்று தோழிகளாலும் , திவி என்று அவனால் மட்டுமே அழைக்கப்பட்ட நம் கதையின் நாயகி திவ்யதர்ஷினி நிமிர்ந்து அவனை பார்க்க , பட்டு வேட்டி பட்டு  சட்டையில் அவனுக்கே உரித்தான கம்பீரத்துடனிருக்க , ஒரு நிமிடம் இருவரும் தங்களை மறந்து மற்றவரை ரசிக்க , ஐயர் கூறிய மந்திரத்தில் முதலில் விழித்தது அவளேதான். 

இவனையா இப்படி பார்த்து கொண்டிருக்கிறோம் என்று அவள் ஒரு கோப பார்வையுடன் முகத்தினை திருப்பிக்கொள்ள , இன்னும் கொஞ்சம் நேரம் இவ பக்கத்தில் நான் உட்கார்ந்து இருந்தால், என்னை ஒரு வழி ஆக்கிவிடுவாள்  என்று மனதில் நினைத்து கொண்டு, ஐய்யரே  மந்திரத்தினை விரைவாக கூறினால் நன்றாக இருக்கும் என பேசிவிட, ஏன் உங்களால் ஒரு மணி நேரம் கூட பொறுத்து கொள்ள முடியாதா என்பது போல் அவள் அலட்சிய பார்வையை வீச , கடவுளே துவக்கமே இப்படியா என்று விதியை நொந்து கொண்டு அவன் தனது திருவாயை மூடியதுடன்  தன் வேலையை தொடர ஆரம்பித்திருந்தான்.

சிறியவர்கள் இப்படி நினைத்து கொண்டிருக்க , பெரியவர்களோ தங்களது கடமையை கண கச்சிதமாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தனர் . முகூர்த்த நேரம் நெருங்க , பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் அவள் கழுத்தில் மங்கள நாண் பூட்டி , திவ்யதர்ஷினி நாராயணமூர்த்தியாக இருந்தவளை , திவ்யதர்ஷினி அர்ஜூனாக மாற்றி  தன்  மனைவி ஆக்கியிருந்தான் அர்ஜுன். 

இந்த ஒரு நாள் , இந்த ஒரு நொடி ஒவ்வொரு பெண்ணுமே தன் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருப்பதை போல ,  திவ்யாவிற்கும் இருப்பதில் ஆச்சர்யமில்லை. நெற்றியில் குங்கும திலகமிட்டு , அக்கினி சுற்றி வலம் வந்து பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் அந்த நாள் இனிமையாக துவங்கியது.

ஒருவாறாக அனைத்தும் முடிந்து கண்ணீர் மல்க பெற்றவர்களை பிரிந்து  , திவ்யா , அர்ஜுன் வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வர 5மணி ஆகியிருந்தது. விளக்கு ஏற்றி அந்த குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக அவள் மாறியிருக்க , எங்கிருந்தோ ஒரு பெரியவர் இன்று மிகவும் நல்ல நாள் , அனைத்தும் இன்றே வைத்து விடலாம் என்ற ஆலோசனைபடி , சாந்தி முகூத்தத்திற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. 

இரவு 9மணி அளவில் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லாமல் அவளை , அவன் அறைக்குள் அனுப்ப ,  மற்றவர் முன்னிலையில் பயத்துடன் , வெட்கமும் இருப்பது போன்று வந்தவள் , உள்ளே வந்ததும் , எந்த ஒரு எண்ணமுமின்றி , எனக்கான அறை எங்கே என்று அவனை அழைக்க , அப்பொழுது தான் அவளை நிமிர்ந்து பார்த்தான் நம் அர்ஜுன்.

காலையில் ஒருமாதிரி அழகு என்றால்  , இப்பொழுது வேறு மாதிரியாக , மஞ்சள் நிற ஷிபான் சில்க் புடவையில் அவள் நிற்க , ஏதும் பேச தோன்றாமல் அவளை பார்த்து கொண்டிருப்பவனை , உங்களுக்கு வேலை இல்லை என்றால் அப்படி வெளியே சென்று வாருங்கள் , எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது , என் அறை எங்கே என்று கூறினால் வசதியாக இருக்கும் என்பவளை ,மனதில் ஒரு வித ஏக்கத்துடன் , அதற்கு முன் சிறிது பேச வேண்டும் என்று கூறினான் அவன்.

நமக்குள் பேச வேண்டிய அனைத்துமே பேசியாகிவிட்டது, மற்றவர் முன் எப்படி நடிக்க வேண்டும் என நீங்கள் பாடம் எடுக்க தேவையில்லை, என்று சட்டெனெ மூஞ்சியை திருப்பி கொண்டாள் திவ்யா.

இதோ பார் திவி , என துவங்கியனை , அப்படி கூப்பிட உங்களுக்கு தகுதி இல்லை என்று தெளிவாக பேசிதானே திருமணமும் நடந்தது, பிறகு இன்னும் என்ன , என்று கடுகடுத்தவளை , ஓகே திவ்யதர்ஷினி என்று அவன் துவங்க , என் பெயரை கூட நீங்கள் கூப்பிட கூடாது என்று கோபமாக உரைத்தாள் அவனது மனையாள்.

சின்ன ஒரு கேலி புன்னைகையுடன் அவளை நோக்கி , சரி அப்படி என்றால் என் நண்பனை போன்று டியர் , டார்லிங் , கண்மணி, குட்டிமா  என்று அழைக்கலாமா இல்லை நான் உன்னை அழைக்காமலே என் மனது புரிந்து நீயாக திரும்பி விடப்போகிறாயா  என்று கேலி செய்பவனை , என்ன நக்கலா என்று முறைக்கும் நிமிடத்தில் அவனுடைய அந்த புன்னைகையில் தன்னை மறக்கவும் தவறவில்லை திவ்யா.

ஓகே மேடம் , மற்றவர் முன்னிலையில் மட்டும் நான் எப்படி அழைத்தாலும் இது போன்று திருப்பி கொள்ள வேண்டாம் , மற்றபடி நானாக உன்னை அழைக்க போவதில்லை சரிதானா என்பவனை , இதுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று மனதிற்குள் அதற்கும் வசை பாடினாள் திவ்யா.

முன்னரே நாம் பேசியவாறு அதோ வலது புறம் அது உன்னுடைய அறை , நீயாக அழைத்தாலொழிய நான் அதற்குள் வரப்போவதில்லை , உன்னுடைய அனுமதி இல்லாமல் வேறு ஏதும் நடக்காது என்று அவன் ஒரு மாதிரியாக முடிக்க , நானாக உங்களை அழைப்பேனா , கனவில் கூட நடக்க போவதில்லை , என்று அதற்கு மேல் அங்கிருக்காமல் தன்னுடைய சிறிய அறைக்குள் நுழைந்து விட்டாள் . 

இருவரும் ஒவவொரு மனநிலைமையில் எண்ணி கொண்டு உறங்க துவங்க , அடுத்த நாள் மிக அழகாக விடிந்தது................................




மீண்டும் வளரும் ..........



பிரண்ட்ஸ் , இது என்னுடைய இரண்டாம் நாவல் , முந்தைய நாவலை போன்று இதற்கும் உங்களுடைய ஆதரவினை எதிர்பார்க்கிறேன்.......தாங்க் யு நண்பர்களே....



இப்படிக்கு 
உங்கள் நாவல் தோழி 
சாந்தா தேவி . வீ